×

பிரதமர் மோடி பேச்சுக்கு முரணாக தேர்தல் அறிக்கையில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய கர்நாடக பாஜ: தினமும் அரை லிட்டர் பால்; ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்

பெங்களூரு: காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த இலவசங்களை பிரதமர் மோடி விமர்சித்து பேசிய நிலையில்கர்நாடக பாஜ தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாரி வழங்கியுள்ளது. அதில் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர், தினமும் அரை லிட்டர் பால் இலவசம் என்பது உள்பட பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜ தேர்தல் அறிக்கையை தயாரிக்க அமைச்சர் சுதாகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர் தயாரித்த தேர்தல் அறிக்கையை பாஜ தேசிய தலைவர் நட்டா பெங்களூரு தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். இதில் முதல்வர் பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜ தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நட்டா கூறியதாவது, ‘ மாநிலத்தின் 25 வருட வளர்ச்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்காக அறிக்கை தயாரித்துள்ளோம். சாதாரண மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. தற்போது மாநில அரசின் பங்களிப்பாக ரூ.5 லட்சம் சேர்த்து ஆயுஷ்மான் காப்பீடு ரூ.10 லட்சம் என உயர்த்தப்படும். யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை நாட்களில் பிபிஎல் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். நகர ஏழைகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தலா ஒரு அடல் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும். இதில் தரமான உணவு குறைந்த விலையில் வழங்கப்படும்.

கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் உடைய பிபிஎல் ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பத்திற்கு தினந்தோறும் 500 மி.லி. நந்தினி பால் மற்றும் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படும். அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 10 லட்சம் வீட்டு மனைகள் வீடுகள் இல்லாத நபர்களுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் நலனை முன்னிட்டு ரூ.30 ஆயிரம் கோடியில் நிதியம் அமைக்கப்படும். ஐஐடியின் தரத்துடன் மாநிலத்தின் அனைத்து மாவட்டத்திலும் கர்நாடக இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அமைக்கப்படும்’ என்றார்.

இலவசங்களை தருவதாக தேர்தல் வாக்குறுதி தருவதை பாஜ தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அண்மையில் பாஜ வாக்குச்சாவடி ஏஜென்ட்களுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் இலவசங்கள் வாரி வழங்குவதாக அறிவிக்கிறது. இதை எப்படி அவர்களால் செயல்படுத்த முடியும். நிதி எங்கிருந்து கிடைக்கும். இலவசங்களை கொடுத்து மக்களை முட்டாளாக்க பார்ப்பார்கள். இலவசங்களால் அரசியல் கட்சிகள் நாட்டை சீரழிக்கின்றன’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு முரணாக கர்நாடக பாஜ தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

* பொது சிவில் சட்டம்
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் அனைவரும் சமம் என்பதை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். கர்நாடகாவில் வெளிமாநிலத்தவர் சட்டவிரோதமாக தங்குவதை தடுக்கும் வகையில் தேசிய குடியுரிமை பதிவேடு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி பேச்சுக்கு முரணாக தேர்தல் அறிக்கையில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய கர்நாடக பாஜ: தினமும் அரை லிட்டர் பால்; ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Karnataka Baja ,Bengaluru ,Congress ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி